நீ வராத மாலை

 நீ வராத மாலை



 நீ வராத மாலை

வெயில் பாயை உதறி சுருட்ட

தொடங்கிவிட்டது

கையசைக்காமல் பறந்து சென்றது

பறவை கூட்டம்

நீர்த்து போன இறுதி சொட்டும் உறுதிப்படுத்தியது

நகர்ந்து வந்த இந்த நாளை நரகமாய்

வெந்து கொதித்த பொழுதுகள்

துளிர்த்த சில பூக்களையும் பிராண்டின

கண் தெரியாத பாலியம் நடுநிசியின்

கூரிய நகங்களால் விரட்டி அடிக்கப்பட்டது

எனது

வனத்தின் எல்லை பகுதியிலிருந்த

நெடுமரங்களும் நிலாக்களும் சரிந்தன

துரோகத்தின் கருகல் நாசியை தொட்டன

வேற்று ஆட்களின் நடமாட்டம் தெரிகிறது

சுகந்த விழிகள் உழுத பாறைகளில்

சுரக்கும் பாலில் பொடித்து

பருகுவேன்

நஞ்சான

காத்திருத்தலை.


- வேல்கண்ணன் 

(361 டிகிரி காலாண்டிதழ் 2012)

கருத்துரையிடுக

0 கருத்துகள்