அபாயக் குறிப்புகள்

 



யாதும் ஊரே என்றாகிவிட்ட ஒருகாலத்தில், பண்பாட்டுப் பவித்திரம் பேணிக் குளிர்காய்வதில் தட்பவெட்பக் கணக்கீடுகளுக்கு எங்கே இடமிருக்கிறது? உள்ளூர் அடவுகள் வெளிநாட்டில் நீட்டி முழக்குவதையும், வெளிநாட்டுக் காபரே உள்நாட்டில் ஒளிபரப்பாவதையும் தீதும் நன்றும் பிறர் தர வாரா என்று யாவரும் கேளிராகிக் கண்டுகளித்துக் கொண்டிருக்கிறோம். இங்குக் குருவிகளுக்கு நீரூட்டியும் தட்டாரப்பூச்சிகளுடன் தற்படமெடுத்தும் கம்பீரங்கொள்ளும் ஓர் உயிர், நகர்ப்புறப் பூனைகளின் அதிகாரத் தொனியை அருவருத்துக் கூசும்போது, நோதலும் தணிதலும் அப்படியே ஆகுக எனக் கனிவைக் கொடையளிக்கவா முடியும்? மருண்டு விழித்த பின்னிரவு உறக்கத்தினூடே புதைந்த கனவொன்றின் எச்சம் துரத்தும்போது, சாதலையும் வாழ்தலையும் தாண்டிக் களவுபோன கபாடபுரத்தை எதிரேறிவரும் தக்கையாகக் கிக்கியின் கூர்விழிகள் கண்டுபிடிக்கின்றன, கரன்சி தின்னும் கூட்டத்தில் பெரியோராவது சிறியோராவது எனச் சிரிக்கிறாள் ஹிகிகொமோரி. அவள் உச்சிக்கிளையில் ஒரு பூ. இது பிளாஸ்டிக் பூவில்லை; கொண்டாடிச் சேர்க்கும் கிளையெல்லாம் பூவாகி நிற்கும் மரம்; ஆகிவந்த குரூரத்தின் எஃகுவுக்குள் புலரும் அபூர்வத் தான்தோன்றி; நம் மூளையெங்கும் நெய்யப்பட்டிருக்கும் ஆயிரமாயிரம் ஜென்மாந்திர நினைவுகளை உசுப்பிவிடும் தூரிகைத் தீட்டல். முப்பதுநாள் மார்கழிப் பனிக்கிடையில் ஒரே ஒருநாள் வெயிலடித்தால் எப்படியிருக்கும்? சித்திரை முழுதும் எரிக்கும் வெயிலுக்கிடையில் ஒரே ஒருநாள் பனிபொழிந்தால் எப்படியிருக்கும்? அப்படியே இக்கவிதைகளும், மார்கழி வெயிலும் சித்திரைப் பனியும்போல் அவ்வளவு நூதனமாக இருக்கின்றன.

            - பேராசிரியர் கல்யாணராமன்




கருத்துரையிடுக

0 கருத்துகள்