சொல்லாத கவிதை

சொல்லாத கவிதை 


அழகான கவிதையென்று

திடீர் மழையைப் போல்

கற்பனையை நனைத்தது


அப்போது

ஏதோ மற்றொரு கவிதையையும்

வாசித்துக் கொண்டிருந்தேன்

நதியில் குளிப்பவன் மீது

பெய்யும் மழையைப் போல்தானிருந்தது


அந்த மழையிலும் நதியிலும்

நான் மூழ்கிக் கொண்டிருந்தேன்


சுகம் என்னுள் வார்த்தைகளாக

வளர்ந்து கொண்டே போனது


வானவில் இடி மின்னல் காற்று

இன்னமும் என்னவோ எல்லாம்

ஏதோதோ வடிவில்

என்னுள் இறங்கிக் கொண்டிருந்தது


தொல்லையெனக் கடக்காமல்

எந்த அவசரமுமில்லாமல்

நின்று பருகும் ஒரு

ஓய்வு நேர மழை போலிருந்தது


வளர்ந்து முடிந்த கவிதை ஒட்டிக்கொண்டது

என்னோடு

முத்தம் கொடுத்த

குழந்தையைப்போல்

முத்தம் போலவும்


அந்தக் கவிதையை நான்

உங்களிடம் சொல்லப்போவதில்லை

அது எனக்குத்தான் மழை

அது எனக்குத்தான் சுகம்

அது எனக்குத்தான் எல்லாம்


என் மழை உங்களுக்கு

வெயிலாகயிருக்கக்கூடும்

அது உங்களுக்கு எதுவுமேயில்லாமலும்

இருக்கலாம்


உங்களிடம் சொன்னபிறகு

அது என்னையும் உங்களைப்போல்

மாற்றக்கூடும்


அந்தக் கவிதையை நான்

உங்களிடம் சொல்லப்போவதில்லை!


-  திங்களன் நாராயணன் 

கணையாழி மார்ச்-2015 இதழில்..

நன்றி : கணையாழி 


~ ~ ~

எழுத்தாளர் ஐ.கிருத்திகா எழுதிய "உப்புச்சுமை" சிறுகதை தொகுப்பு வாங்க 


கருத்துரையிடுக

0 கருத்துகள்