படைப்பாளிகளுக்கு நிதானமும் அவசியம்!

படைப்பாளிகளுக்கு நிதானமும் அவசியம்!

இன்று ஒரு எழுத்தாளர் ஆண்டுக்கு ஐந்து, பத்துப் புத்தகங்கள் வெளியிடுவது மிகவும் சர்வ சாதாரணமாக ஆகிவிட்டது. மூத்த எழுத்தாளர்கள், இளைய எழுத்தாளர்கள் என்று இந்த வேகத்தில் செயல்படுபவர்கள் பலர் இருக்கிறார்கள்.    ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு கற்பனையே செய்து பார்க்க முடியாத விஷயம் இது. ஒரு எழுத்தாளர் தன் வாழ்நாள் முழுவதும் ஐந்து புத்தகங்கள் வெளியிட்டிருந்தால் அதுவே பெரிய விஷயமாகக் கருதப்பட்ட நாட்கள் உண்டு. தமிழின் முதன்மையான படைப்பாளிகளில் ஒருவராகக் கருதப்படும் மௌனி எழுதிய கதைகள் அனைத்தையும் முன்னூறுக்கும் குறைவான பக்கங்களில் அடக்கிவிடலாம். மௌனி எழுதிய ஒட்டுமொத்தப் பக்கங்கள் அளவில் ஓரிரு மாதங்களில் எழுதும் எழுத்தாளர்கள் இப்போது இருக்கிறார்கள். முன்பைவிடப் பல மடங்கு கல்வியறிவு பெற்ற மக்கள், பிரசுர வாய்ப்பு, வாசகர் பரப்பு, ஊடக வெளிச்சம், சமூக ஊடகங்கள் போன்ற காரணிகளும் தற்போதைய இந்த வேகத்துக்கு முக்கியக் காரணங்கள்.

முன்பு இல்லாத சுதந்திரம் இது. சுதந்திரத்துடன் கூடவே பொறுப்பும் வந்து சேர்கிறது. அந்தப் பொறுப்பைத் தற்காலப் படைப்பாளிகள், பதிப்பாளர்கள் எந்த அளவுக்கு உணர்ந்திருக்கிறார்கள் என்பது தெரியவில்லை. புத்தகக் காட்சியை முன்னிட்டுப் பதிப்பாளர்கள் புத்தகங்கள் கொண்டுவர வேண்டும் என்று முயற்சியெடுப்பது போலவே புத்தகக் காட்சிக்குப் புத்தகம் கொண்டுவர வேண்டும் என்று படைப்பாளிகளும் கருதுவதுபோல் தோன்றுகிறது. இதனால் ஒரு படைப்புக்கு உரிய காலத்தைப் பலரும் அனுமதிப்பதில்லையோ என்ற ஐயம் எழுகிறது.

ஒரு படைப்புக்கான கரு தோன்றியதும் அதை மனதில் ஊறப்போட்டுத் திரும்பத் திரும்ப அசைபோட்டு அதைச் செழுமைப்படுத்துவது, தேவைப்பட்டால் கள ஆய்வுகள், வாசிப்பு போன்றவற்றை மேற்கொள்வது, எழுதுவது, சிறிது காலம் பொறுத்துத் திருத்தி எழுதுவது, நண்பர், எழுத்தாளர், விமர்சகர், செம்மையாக்குநர் போன்றோரிடம் கொடுத்து அவர்கள் கருத்துகளைக் கேட்டு அவற்றைப் பரிசீலிப்பது, தேவைப்படும் மாற்றங்களைச் செய்து செம்மைப்படுத்துவது ஆகியவை உலகெங்கும் நடந்துவரும் முறை, ஒரு படைப்பை மேலும் பரிமளிக்கச் செய்வதற்கான உரிய வழிமுறை இது.

தமிழ் எழுத்தாளர்கள் பலருக்கு இதிலெல்லாம் நம்பிக்கை இல்லை போலிருக்கிறது. உடனடிப் பிரசுரம், அதைப் பற்றிய பரவலான பேச்சுகள், ஊடக வெளிச்சம் போன்றவையே பல படைப்பாளிகளுக்கு முக்கியமானதாகப்படுகிறது. இவற்றையெல்லாம் விட ஒரு படைப்பு முக்கியமானது. அந்தப் படைப்புக்குரிய நியாயத்தைச் செய்ய கொஞ்சம் நிதானமும் தேவை.

புதிது புதிதான களங்களையும் வாழ்க்கைத் தரப்புகளையும் உள்ளடக்கிய படைப்புகள் தற்போது வருகின்றன. கூடுதலாக, நிதானமும் பொறுப்புணர்வும் சேர்ந்துகொள்ளுமென்றால் இந்தப் படைப்பாளிகள் வீச்சும் நீடித்ததன்மையும் கொண்டவர்களாக உருவாக முடியும்!

- இணையத்தில் படித்தது

கருத்துரையிடுக

0 கருத்துகள்