புத்தகக்கண்காட்சி சில குறிப்புகள்

44வது சென்னை புத்தகக் கண்காட்சி வரும் பிப்ரவரி 24ம் தேதி முதல் மார்ச் 9ம் தேதி வரை (2021) நந்தனம் YMCAவில் நடைபெறுகிறது. மொத்தம் 14 நாட்கள். காலை 11 மணி முதல் இரவு 8 மணி வரை.
இது கண்காட்சி. பதிப்பாளர்கள் தங்களிடம் என்னென்ன புத்தகங்கள் இருக்கின்றன... எவற்றை பதிப்பித்திருக்கிறோம்... என்பதை பார்வைக்கு வைக்கும் இடம். வாங்குவது என்பது இரண்டாம்பட்சம். புத்தகங்களை வாங்கி விற்பவர்களுக்கே இதில் முதலிடம். வாசகர்கள் பார்வையாளர்கள் மட்டுமே.
எனவே கொரோனா கால பொருளாதார நெருக்கடி... பணமில்லை... என கண்காட்சிக்கு வருவதை தவிர்க்காதீர்கள். புத்தக ஆர்வலர்கள் அனைவரும் வாருங்கள். நிதானமாக சுற்றிப் பாருங்கள். புத்தகங்களை குறித்து கொள்ளுங்கள். பிறகு பொறுமையாக வாங்கலாம்.
இது சந்தை. காட்சிக்கு வைக்கப்படுபவை சரக்குகள். இந்த உண்மையை ஏற்றுக் கொள்வதே நல்லது.
‘இலக்கியம் என்பது உன்னதம்...’ போன்ற தேன் தடவப்பட்ட வாக்கியங்களில் மயங்கி அற்புதமான உங்கள் வாழ்க்கையை தொலைத்துவிடாதீர்கள்.
காட்சிக்கு வைக்கப்படும் உடைகள் எல்லாமே நன்றாக இருக்கும். ஆனால், நம் உடல் அமைப்புக்கு ஏற்ற ஆடையை அணிந்தால்தான் நாம் நாமாக காட்சி அளிப்போம். எல்லா வண்ணங்களும் எல்லாருக்கும் பொருந்தாது. அவரவருக்கான நிறங்களே அவரவருக்கான அடையாளம்.
இதே சூத்திரம்தான் புத்தகங்கள் விஷயத்திலும். பரிந்துரைகளை நம்பாதீர்கள். புகழ்பெற்ற எழுத்தாளராகவே இருந்தாலும் அவரது பட்டியலை அப்படியே கண்ணை மூடிக்கொண்டு ஏற்காதீர்கள். பரிசீலனைக்கு எடுத்து கொள்ளலாம். ஆனால், ஒருபோதும் இறுதி முடிவாக பரிந்துரைகளை, பட்டியல்களை கருதாதீர்கள்.
ஒவ்வொருவரும் தங்கள் வாசிப்பு அனுபவத்தின் வழியாக கண்டறியும் புள்ளி இது. இதற்குப் பின்னால் அவரவர் வாழ்க்கை நிலையும், புறச் சூழல்களும், அரசியலும் இருக்கின்றன. சுருக்கமாக சொல்வதென்றால் ஒவ்வொரு பரிந்துரையும் பட்டியலும் தனிப்பட்ட நபரின் விருப்பு வெறுப்பு சார்ந்தது.
உதாரணமாக ரஷ்ய இலக்கிய தமிழாக்கங்கள் தமிழகத்தில் கோலோச்சியபோது க.நா.சு என்கிற க.நா.சுப்பிரமணியம் மிக கவனமாக ஸ்காண்டிநேவிய பிரதிகளை முதன்மைப்படுத்தத் தொடங்கினார். இதற்குப் பின்னால் க.நா.சு., நம்பிய - பின்பற்றிய அரசியல் இருக்கிறது. எப்படி for every action there is an equal and opposite reaction இருக்கிற்தோ அப்படி ஸ்காண்டிநேவிய பிரதிகளும் அமைந்தன. அவை ஒன்றும் சோடையானதல்ல. எனவே அதுவரை தமிழகம் அறியாத சர்வதேச இலக்கியப் போக்கு ஒன்று தமிழ்ச்சூழலில் அறிமுகமானது. தமிழ் இலக்கியத்தையும் வளர்த்தெடுத்தது.
தன் வாழ்நாள் முழுக்க க.நா.சு., தமிழாக்கம் செய்த பிரதிகளையும் அவரால் பட்டியலிடப்பட்ட நூல்களும் இதே அரசியல் சார்பானதுதான். க.நா.சு., என்றில்லை இன்றைய ஜெயமோகன், எஸ்.ராமகிருஷ்ணன், சாரு நிவேதிதா உட்பட அனைவரது பரிந்துரைகள், பட்டியல்கள், எழுத்துக்கும் பின்னால் அவர்கள் நம்பும்... இலக்கியத்தை அணுகும் அரசியல் இருக்கிறது. இந்த அரசியலுடன் சில நேரங்களில் நாம் நிபந்தனைக்கு உட்பட்டு இணைகிறோம்; முரண்படுகிறோம். அப்படித்தான் அவர்கள் முன்வைக்கும் பட்டியல், பரிந்துரைகள், அறிமுகங்களும்.
இது தகவலாக மட்டும் இங்கே சுட்டப்படுகிறதே தவிர சரி - தவறு என்ற பொருளில் அல்ல.
அடுத்து பிற மொழி இலக்கியங்கள் சார்ந்தது.
எடுத்துக்காட்டாக மலையாள, தென் அமெரிக்க இலக்கியப் பிரதிகள் தமிழாக்கம் செய்யப்படும் அளவுக்கு மற்ற மொழி இலக்கியங்கள் மொழிபெயர்ப்பு செய்யப்படுவதில்லை. காரணம், அந்தந்த மொழி சார்ந்த பிரதிகளின் விநியோகம். Supply அதிகம் இருப்பதால் அது குறித்த பேச்சும் பரவலாக நிகழ்கிறது. இதன் அர்த்தம் ‘அங்கு’ மட்டுமே ‘நல்ல இலக்கியங்கள்’ இருக்கின்றன என்பதல்ல.
வடிவேலு - ஆர்,பார்த்திபனின் புகழ்பெற்ற ‘இங்கு நல்ல மீன்கள் விற்கப்படும்’ நகைச்சுவை நினைவில் இருக்கிறதல்லவா..? அதேதான்.
போலவே சமூக வலைத்தளங்களில் இனி வெள்ளமாக பாயப்போகும் புதிய புத்தகங்களின் முகப்பு அட்டைகள்.
இணைய விற்பனைத்தளங்களில் எப்படி பொருட்களை தேர்வு செய்வோமோ அப்படி புத்தக அட்டைகளை அணுகுங்கள்.
எப்படி நம்மையும் மீறி இணைய விற்பனையகங்களில் மேயும்போது கவர்ச்சியில் மயங்கி பயன்படுமா இல்லையா என்று பார்க்காமல் ஆர்டர் செய்துவிட்டு பார்சல் வீட்டுக்கு வந்ததும் திருதிருவென விழிப்போமோ... விழிக்கிறோமோ அப்படி புத்தக அட்டைகளின் டிசைனில் மயங்கி தேவையில்லாததை எல்லாம் வாங்க வாய்ப்பு இருக்கிறது.
இது நுகர்வு உலகம். நாம் நுகர்வோர்கள். சரக்கை விற்பவர்கள் நம்மை போதையில் ஆழ்த்தவே மெனக்கெடுவார்கள். வெள்ளத்தில் மூழ்காமல் தப்பிப்பது நம் கையில்தான் இருக்கிறது.
அட்டை டிசைனில் மயங்காதீர்கள். தலைப்பை பார்த்து புருவத்தை உயர்த்தாதீர்கள். பின் அட்டைக் குறிப்பில் மனதை பறிகொடுக்காதீர்கள். தங்கள் புத்தகங்களுக்கு எழுதிய முன்னுரையை எல்லா எழுத்தாளர்களும் தத்தம் சமூக வலைத்தள பக்கங்களில் பகிர்ந்து கொள்வார்கள். அவை அனைத்தும் படிப்பவர்களை நெகிழ வைக்கும். எப்படியெல்லாம் உழைத்து, இப்படைப்பை, தாங்கள் எழுதியிருக்கிறோம் என்று சொல்வார்கள்.
அது உண்மையும் கூட. நிஜமாகவே மாபெரும் உழைப்பை செலுத்திதான் ஒவ்வொருவரும் புத்தகம் எழுதுகிறார்கள்; தமிழாக்கம் செய்கிறார்கள்.
சிலந்தி பின்னும் வலையும், தேனீக்கள் கட்டும் கூடும் துல்லியமாக இருந்தாலும் அவை, தான் பின்னும் வலையையோ கூடுகளையோ மனதில் கற்பனை செய்து பார்ப்பதில்லை. ஆறறிவு விலங்கான மனிதன் மட்டுமே, தான் செய்யும் செயலுக்கு முன்னால் அச்செயலை கற்பனையில் காண்கிறான். அதனாலேயே அவன் தனித்த உயிரினமாக பரிணமிக்கிறான்.
இந்த தனித்தன்மை கண்டிப்பாக அவன் எழுதும் நூல்களில் எதிரொலிக்கும்.
அதேநேரம் வாசகன் என்பவன் ஐந்தறிவு படைத்தவனல்ல. அவனும் ஆறறிவு விலங்குதான். தான் படிக்கும் புத்தகம் குறித்த சித்திரத்தை வாசிக்கும் முன்பே தனக்குள் வளர்த்துக் கொள்கிறான். எழுதியவனுக்கு சமமான உழைப்பை செலுத்தியே படிக்கிறான்.
எனவே உழைப்பை செலுத்தி நாம் படிக்கும் புத்தகம் நமக்கு பயன்படும்படியாக இருக்க வேண்டும். வேட்டுவனுக்கு தேவை வேட்டைக் குறித்த விஷயங்கள்தானே தவிர எப்படி மீன் பிடிக்க வேண்டும் என்பதல்ல. எப்படி மீன் பிடிக்க வேண்டும் என்பது வேட்டைக்கும் உதவினால் தாராளமாக அவனே அதைத் தேடிப் படிப்பான்.
நமக்கான வாசிப்பை நோக்கி நகர்வது நமக்கு நல்லது.
மனித குலம் தன் வரலாறு முழுக்க சேகரித்த அனுபவங்களை இரண்டே சொற்களில் அடக்கிவிடலாம். ஒன்று Discover. மற்றது Invention.
நாம் வாங்கும் புத்தகமும் வாசிக்கும் நூலும் நம்மை நாமே கண்டறிய உதவ வேண்டும்; நம்மை நாம் உருவாக்கிக் கொள்ள பயன்பட வேண்டும்.
வாசிப்பதில் உயர்வு - தாழ்வு இல்லை. உங்களுக்கு வெகுஜன இலக்கியம் பிடிக்குமா..? நல்லது. அதை வாங்கிப் படித்து உங்களை நீங்களே உற்சாகப்படுத்திக் கொள்ளுங்கள். உங்களுக்கு சிறுபத்திரிகை இலக்கியம் மட்டுமே பிடிக்குமா..? அதை வாங்கி வாசியுங்கள்.
பண்டத்தை நுகரப் போவது நாம்தான். அது நம் உயிர்வாழ்க்கைக்கு அவசியம். நாம் வாழும் சூழலின் தட்பவெப்ப நிலைக்கு ஏற்ற உணவை உண்பதே நம் உடல் அணுக்களை உறுதியாக்கி வளர வைக்கும்.
எந்தப் புத்தகத்தையும் நாம் எழுதியவரின் கோணத்தில் இருந்து படிப்பதில்லை.
நம்மை நாமே கண்டறியவும், நம்மை நாமே உருவாக்கிக் கொள்ளவும்தான் வாசிக்கிறோம்.
நந்தியா வட்டை மட்டும் செடியல்ல; சப்பாத்திக் கள்ளியும் செடிதான்.
திறந்த மனதுடன் புத்தக கண்காட்சிக்கு வாருங்கள்.
தெரிந்த பதிப்பகங்களுக்கு மட்டும் செல்லாமல் இருக்கும் அனைத்து பதிப்பக ஸ்டால்களுக்கும் சென்று நிதானமாக அங்கிருக்கும் புத்தகங்களை பார்வையிடுவோம்.
எடுத்துப் புரட்டி ஏதேனும் ஒரு பக்கத்தை படித்தால் ஒரு சோறு பதம் தெரிந்து விடும். அச்சோறு ஜீரணமாகி நமக்கு சக்தியை தரும் என்றால் பில் போடுவோம்.
விருப்பமானதை விருப்பத்துடன் வாங்கி அர்பணிப்புடன் படிக்கும் உழைப்பை மேற்கொள்வோம்.
நம்மை நாம் கண்டறிந்து நம்மை நாமே உருவாக்கிக் கொள்வோம்.

44வது சென்னை புத்தக கண்காட்சி உங்களை / நம்மை அன்புடன் வரவேற்கிறது.

                                        -    கே.என்.சிவராமன்                       

கருத்துரையிடுக

0 கருத்துகள்