தாளடி

நூல் : தாளடி நாவல்
ஆசிரியர் :சீனிவாசன் 
பதிப்பகம் :தேநீர் பதிப்பகம்பத்து ஆண்டுகளுக்கு முன்பு பிலிப் புல்மேன் எழுதிய ‘The goodman Jesus and the scoundrel christ’ என்ற புத்தகம் வெளியானது. அந்தப் புத்தகத்தின் அட்டை மடிப்பின் உட்புறத்தில்  ‘The book is about how stories become stories’ என்ற வாசகத்துடன் புத்தகத்தின் அறிமுகக் குறிப்பு முடிந்திருந்தது. சீனிவாசன் நடராஜனின் ‘தாளடி’யைப் படித்து முடித்தவுடன் இந்த ஆங்கில வரியை தமிழில் மொழிபெயர்த்தால் அதுவே இந்த நூலுக்கான சிறந்த அறிமுகமாக இருக்கும் என்று தோன்றியது.

‘கதைகள் எப்படி கதைகளாகின்றன’ என்பதைத் தான் இந்த நாவல் சொல்லாமல் சொல்கிறது.

“கதை நம்மையும் சேர்த்துக் கதை சொல்லப் போகிறது. சொல்லப் போகிற கதை நம்முடைய கதை” என்று இந்த நாவலில் வரும் கதாபாத்திரம் தொடக்கத்திலேயே ஓர் உரையாடலில் குறிப்பிடுவதையும் வாசகர் நினைவில் கொண்டு முன்நகரலாம். மேற்குறிப்பிட்ட ஆங்கில நூலைப் பற்றி படித்த இன்னொரு வரியும் நினைவுக்கு வருகிறது. ‘Part Facts and part Fiction’ என்பதுதான் அந்த வரி. இந்தக் கூற்று ஒரு விதத்தில் ‘தாளடி’க்கும் பொருந்தும். இந்த நாவல் ‘பெரும்பகுதி நிஜம்; எஞ்சியது மறைந்து நிற்கும் நிஜத்தின் புனைவு”.

ஏறக்குறைய 50 ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்த, தமிழனை தலைகுனிய வைத்த கீழ்த்தஞ்சை மாவட்ட அராஜகச் செயல்; அதற்கு முன்னும் பின்னும் வளர்ந்த, வளர்க்கப்பட்ட, கிளைத்த அரசியல் கட்சிகளின் செயல்பாடுகள் மற்றும் சமூக எழுச்சி ஆகியவற்றின் வரைபடமாக இந்த நாவல் உருவாகியிருக்கிறது. மிகுந்த பொறுப்புணர்ச்சியுடனும் மெய்யுணர்த்தும் துணிவோடும் செயல்பட்டிருக்கிறார் சீனிவாசன். ‘கீழ்வெண்மணி படுகொலை’ என்ற மனித அநாகரிகத்தைக் கேட்கும்போதே மனம் பதைக்கும். அது ஒரு வேளை உணவுக்கும், உழைப்புக்கான கூலிக்கும் 44 உயிர்கள் தீயில் கருகிய கதை. இந்தக் கொடிய நிகழ்வைச் சுற்றிப் படர்ந்திருந்த மனிதர்களையும் சமூகக் கறைகளையும் ஆவேசமில்லாமல் அமைதியாய்ப் பேசுகிறது இந்த நாவல்.

20ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் காவிரிக்கரை சமூக அமைப்பை கந்தசாமியின் ‘சாயாவனம்‘ சுட்டியது. பாவை சந்திரனின் ‘நல்ல நிலம்‘ இந்திய விடுதலை வரையுள்ள காலத்தில் நாகப்பட்டினம். திருவாரூர் பகுதியை மையமாக வைத்து மண்ணின் மைந்தர்களைக் காட்சிப்படுத்தியது.

இந்திய சுதந்திரத்திற்குப் பிந்தைய 20 ஆண்டுகளில் கீழ்த்தஞ்சையின் திராவிட இயக்கமும் பொதுவுடைமை இயக்கமும் பல நூற்றாண்டு சமூகப் படிநிலைகளை தகர்த்த வரலாறுதான் கீழ்வெண்மணி வரலாறு. இந்தத் தீயின் உக்கிரத்தை பேசியிருக்க வேண்டிய இந்திரா பார்த்தசாரதியின் நாவல் தடம் மாறியதால் சர்ச்சைக்குள்ளானது.

இப்போது குறுவை முடிந்து ‘தாளடி’ வந்திருக்கிறது.

தொடக்கத்தில் குறிப்பிட்டது போல தாளடியில் வரும் சீனுவாசம்பிள்ளை ‘கோபால கிருஷ்ண நாயுடு’ ராமையா எல்லோரும் நிஜ மனிதர்கள். இந்த நாவலின் நிழல் உருவங்களை முன்னும் பின்னும் கொண்டு கூட்டி பொருள் கொண்டால் நிழல் நிஜமாகிவிடுகிறது.

கீழ்தஞ்சை பூமியில் நிலவுடைமை சமூகத்துக்கும் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களை நிர்வகிக்கும் மடாலயங்களுக்கும் இடையே இலை மறைவு காய்மறைவாய் மறைந்திருந்த அரசியல் செல்வாக்கையும் அதிகாரத்தையும் நேரடியாகவே சொல்கிறார் சீனிவாசன். இந்த மண்ணில் நிலைபெற்ற மடங்களின் மாண்பை குலைக்கும் மடம் சார்ந்த மனிதர்களின் இழிசெயல்களை புனைகதையில் கோடிட்டு காட்டியவர் மாயவரத்து மனிதரான கல்கிதான். கல்கியின் ‘கள்வனின் காதலி தான் மட விவகாரங்களின் விகாரங்களை கொஞ்சம் தொட்டுக் காட்டிய தமிழ் நாவல். கல்கி இந்த மர்ம பிரதேசங்களுக்குள் சாவித் துவராத்தின் வழியே ஊடுருவியிருக்கிறார் என்றால் ‘தாளடி’ நாவல் அந்த மர்ம கோட்டைக்குள் ரகசிய காமிராக்களை இங்கிங்கு எனாதபடி எல்லா இடங்களிலும் பொருத்தி நேரடியாகக் காட்சிப்படுத்துகிறது.

மருத நிலத்தை மதமும் நிலமும் ஆட்சி செய்த காலம் அது. காலத்தைப் புரட்டிப் போட்டது கம்யூனிசமும் திராவிட இயக்கமும். வன்முறையே தீர்வென்றது ஒரு குரல். கட்சி அரசியல் உய்வென்றது ஓர் இயக்கம். ஒரு குரலில் பேசியவர் மற்ற குரல் சரியென்று மாற்றமெய்தியதும் உண்டு. இந்த வரலாற்றுப் பின்னணியில் புனையப்பட்ட தாளடி மையப்புள்ளியில் நின்று அலறாமல் குறுக்கும் நெடுக்குமாய் தத்தித் தாவி கண்ட உண்மைகளை விண்டு சொல்கிறது. இரண்டாயிரம் பக்கங்களில் எழுதக் கூடிய விஷயத்தை இருநூறு பக்கங்களுக்குள் அணுவைத் துளைக்கும் வேலையை செய்திருக்கிறது.

அன்பழகன் என்றொரு கேரக்டர். தாமரையின் கணவன். மனைவி வன்முறையின் பாதையில் கட்சி அரசியலில்  தன்னை இணைத்துக் கொண்ட அன்பழகனை தாமரை வெறுக்கிறாள். அத்தி பூப்பது போல அன்பழகன் இந்த நாவலில் நடமாடினாலும் தனக்குத் தானே அவன் பேசிக் கொள்ளும் ஒற்றை உரையாடலில் இரு இயக்கங்களின் போக்கு, செயல்பாடு எல்லாம் பதிவாகி வரலாற்றை மீள்வாசிப்புக்கு உட்படுத்துகின்றன.

“சுடுசோத்த வாயில் வைக்கும்போது, எங்க வூட்டுப் புள்ளைங்க வந்து கண்ணு முன்னாடி பிச்சை எடுக்குதுங்க. கையை உதறி எந்திரிச்சா, எங்க அப்பன் ஆத்தால்லாம் பட்ட அவமானம் கதை கதையாக கேக்குது. ஒருத்தனும் இங்க நமக்கானவனுவோ இல்ல. நம்ம சனங்கள காப்பாத்தனும்தான். அதுக்காக. இந்தச் சிறுக்கி மவ சேர்ந்த கட்சியில் என்னால சேரமுடியாது. எல்லாத்துக்கும் ஒரு அளவு இருக்கு. அவனுவோதான் வெறிநாய்னா, அதக் கொல்றதுங்குற பேருல நாம விஷமா மாறமுடியாது. அண்ணா, தேர்தல் பாதைக்குப் போன பெறவு, நமக்கெதுக்கு அடிதடியும் அருவா வெட்டும்னு எவ்வளவோ சொல்லிப் பாத்துட்டன்... கேக்குறாளா... அந்த கண்டார ஒழி...”

கதையின் காலம் சொற்களில் தெறிக்கிறது. வசனத்தில் வரலாறு புரள்கிறது. கையாளும் வசவுச் சொற்கள் அந்த மக்களின் அன்றாடமொழி. மாற்று இயக்கங்களின் பாதைகள் தெரிகின்றன. எல்லாமும் ஒற்றைப் பத்தியில் கொம்பு சீவி விடப்பட்ட மேற்கத்தி காளைகள் போல உலவுகின்றன.

ஒரு ஓவியத்தின் மரச்சட்டம் கதை சொல்வதாகத் தொடங்கும் இந்த நாவல், ஏதோ மாய யதார்த்த புதிர்களில் சிக்கிக் கொள்ளுமோ என்ற ஐயத்தை தொடரும் பக்கங்கள் நிகழ்வுகளுக்கேற்ப வண்ண வண்ண ஆடை புனைந்து வாசகனை வசப்படுத்துகின்றன. நவீன யுக்தி இழையோட மக்களின் மொழியில் காலத்தை பிளந்து எதிர்வரும் காலத்தை எதிர்கொள்ளும் சாத்தியங்களை யோசிக்க வைக்கிறது தாளடி நாவல்.

பாப்பாத்தி, மாரியம்மாள், பர்வதம், பார்வதி, தாமரை என கிளர்ந்தெழும் சமூகத்தின் எத்தனை எத்தனை விதமான பெண்கள்; இந்தப் பெண்களின் முகங்கள் செயற்கை பூச்சற்றவை. மைனரை கொலைகளத்திற்கு வரவழைக்க நடுரோட்டில் அரைகுறையாய் நிற்கும் பாப்பாத்தி தனது மோக இச்சை என்ற பிணைப்பிலிருந்து வெளியேறி வன்முறைக்கு துணைநிற்கிறாள் அல்லது ஆளாக்கப்படுகிறாள்.

இயல்பாக நகரும் கதை; இயல்பாகச் சொல்லப்படும் கதை; சொல்லப்படாத கதையின் கதை; வரலாற்றின் கதை; வரலாற்றின் கதையிலிருந்து வரஇருக்கிற நாட்களின் கதை என்ன என்று யோசிக்க வைக்கும் கதை.

எதிர்காலத்தை முன்னுரைக்க வரலாறு முன்நிற்க வேண்டும். முன்நிறுத்தியிருக்கிறார் சீனிவாசன்.

வாழ்த்துகள்

விமர்சனம் : எழுத்தாளர் சந்தியா நடராஜன் (சந்தியா பதிப்பகம் )
நன்றி: காவிரிக்கதிர்.

தி ஹிந்து நாளிதழ் விமர்சனம்:விலை - ரூ 230 ரூ 207( 10% தள்ளுபடி) கூரியர் செலவு ரூ 30
புத்தகம் வாங்க 

கருத்துரையிடுக

0 கருத்துகள்