2019ஆம் ஆண்டிற்கான ‘விளக்கு’ விருதுகள் அறிவிப்பு

 அமெரிக்கத் தமிழர்களின் ’விளக்கு’ இலக்கிய அமைப்பின் 24வது (2019) “புதுமைப்பித்தன் நினைவு” விருதுகளை மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறோம். எழுத்தாளர் திலகவதி, பேரா. சு. சண்முகசுந்தரம், கவிஞர் சமயவேல் ஆகிய மூன்று உறுப்பினர்களைக் கொண்ட நடுவர் குழு 2019 ஆம் ஆண்டின் விருதுக்குரியவர்களாக கீழ்காணும் இரு எழுத்தாளர்களை ஒரு மனதாகத் தேர்வு செய்துள்ளது.


1. கவிஞர் கலாப்ரியா    கவிதை, நாவல், வாழ்க்கை வரலாற்றுப் புனைவுகள்,      
                       கவிதை விமர்சனம், தமிழ்த் திரையுலகம் பற்றியும்
                       தமிழர் வாழ்வில் திரையுலகின் தாக்கங்கள் பற்றியும்   
                       ஏராளமான ஆவணப் பதிவுகள்.
2. பேரா. க.பஞ்சாங்கம்   கவிதை, நாவல், சங்க இலக்கியம் முதல் சமகால
                       இலக்கியம் வரை சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட
                       ஆய்வுக் கட்டுரைகள், நவீனக் கோட்பாடுகளின்
                       அடிப்படையிலான விமர்சன ஆய்வுகள்,

ஒவ்வொன்றும் ரூ 1,00,000 மதிப்புள்ள இவ்விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும்.

விருதாளர்களைப் பற்றிய குறிப்புகளும், அவர்களின் பங்களிப்புகள் பற்றிய குறிப்புகளும், அவர்களின் படைப்புகளின் பட்டியல்களும் அடுத்த பக்கங்களில் கொடுக்கப்பட்டுள்ளன.

இந்தச் செய்தியை தங்கள் தொலைகாட்சி, செய்தித்தாள், அல்லது பத்திரிகையில் விரிவாக வெளியிடுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
தமிழின் மிக முக்கியமான,  ஒரு தவிர்க்கவே முடியாத அபூர்வமானதொரு நிகழ்வு கலாப்ரியா. தமிழ் கவிதைப்போக்கில், கவிதை மொழியில், அழகியலில், நவீனம் நோக்கிய பலவகையான உடைப்புகளையும் திறப்புகளையும் ஏற்படுத்திய முதன்மைக் கவியான கலாப்ரியாவுக்கு அவரது கவிதைச் செயல்பாட்டையும் அண்மைக்கால உரைநடைகள் மற்றும், புனைவு முயற்சிகளையும் கௌரவித்துப் போற்றும் வகையில்   2019ஆம் ஆண்டிற்கான ‘புதுமைப்பித்தன் நினைவு விளக்கு’ விருதினை அவருக்கு அளிப்பதில் ‘விளக்கு’ விருது நடுவர் குழுவும் ‘விளக்கு’ அமைப்பும் மனநிறைவும் மகிழ்வும் கொள்கின்றன.

தமிழில் பண்டைய இலக்கிய இலக்கணங்களில் இருந்து இன்றைய சமகாலம் வரையிலான எல்லா வகைப் பிரதிகளிலும் ஆழ்ந்த புலமையும், அவற்றை சமூகவியல் மற்றும் நவீன கலையிலக்கியக் கோட்பாடுகளின் அடிப்படையில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆழமான கட்டுரைகளில் திறனாய்வு செய்து, தமிழில் தெளிவான திறனாய்வுப் பார்வைகளை உருவாக்கியிருக்கும் பேராசிரியர் க.பஞ்சாங்கத்தைக் கௌரவித்துப் போற்றும் வகையில் 2019ஆம் ஆண்டிற்கான ‘புதுமைப்பித்தன் நினைவு விளக்கு’ விருதினை அவருக்கு அளிப்பதில் ‘விளக்கு’ விருது நடுவர் குழுவும் ‘விளக்கு’ அமைப்பும் மனநிறைவும் மகிழ்வும் கொள்கின்றன.

‘விளக்கு’ செயற்குழு
அக்டோபர் 14, 2020







கருத்துரையிடுக

0 கருத்துகள்