நூல் விமர்சனம்
நூல் : பூனையே உன் கண்ணை மூடு
நூலாசிரியர் : மா.காளிதாஸ்
வெளியீடு : மௌவல் பதிப்பகம்
பக்கம் : 74
நூலின் விலை : 100
அவர் ஒரு ஆசிரியர் பத்திற்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதியுள்ளார் .
இதற்கு முன் "சடவு" நூலை எனக்கு அனுப்பிவைத்திருந்தார் அதுவும் நல்ல கவிதை தொகுப்பாக இருந்தது.
அடுத்ததாக இந்த புத்தகத்தை கேட்டேன் கேட்டதும் அனுப்பிவைத்தார்.
தமிழ்பல்லவி இதழ் நடத்திய கவிதைப்போட்டியில் ஹைக்கூ வகைமையில் இவருடைய "பூனையே உன் கண்ணை மூடு " என்ற இந்த புத்தகம் மூன்றாம் பரிசு பெற்றது அதற்கு என் வாழ்த்துகள் .
ஹைக்கூ என்பது எப்போதும் நம்மை சுற்றியுள்ளவைகளை நாம் கண்டு உணர்ந்து கொள்வது
இன்னொன்று நம்மை நாம் உணர்ந்து கொள்வது
ஹைக்கூ அதன் பிறப்பு ஆழ்கடலின் அமைதியை போன்றது
வெளியே சலனத்துடன் இருந்தாலும் உள்ளே சலனமற்ற ஒரு தியான நிலையையொத்தது .
ஹைக்கூவிற்குள் நுழைவோம்
கண்ணாடியை கடக்கும்
துறவி முணுமுணுக்கிறார்
இது சுக்குநூறான பிம்பம்.
உடைந்த கண்ணாடியில் சுக்குநூறான பிம்பம் எத்தனை யதார்த்தை கொணர்கிறது இந்த கவிதை.
துறவியின் மடியில் பூ விழுகிறது
சீடன் குழம்புகிறான்
வரமா? சாபமா?
வரத்தையும் சாபத்தையும் ஒரு பூ தீர்மானிக்குமா?
வரமென்பதையும் சாபமென்பதையும் அந்த ஒரு பூ அறிந்திருக்குமா?
யாருக்கு அது வரம் யாருக்கு அது சாபம் யாருக்குதான் தெரியும்
தெளிந்தோருக்கு ஞானம்.
துறவியின் தாடியில்
அமர்ந்திருக்கிறது ஈ
தியானம் கலையும் வரை.
இங்கே தியானம் என்பது எது
யாருடைய தியானம் கலையும் வரை
துறவியா? ஈ யா? அல்லது வாசிக்கும் நாம் ஆ ?
முதலில் யாருடைய தியானம் கலையும் .
வசந்தத்திலும் உதிர்கிறது
ஒரு பழுப்பிலை
புழுவை சுமந்துக்கொண்டு.
நம்மை நாம் சுமப்பதே பாரமாக நினைக்கின்ற இந்த உலகில்
ஒரு பழுத்த இலை தான் உதிர்கிற நிலையிலும்
ஒரு புழுவை சுமந்துக்கொண்டு உதிர்கிறதே ஆஹா என்ன ஒரு தியானத்தை கடந்த ஞானம் .. உள்ளே சென்று ஆழ்ந்து சிந்தித்தால் இங்கே புழுவும் இலையும் ஒரு குறியீடு மட்டுமே நம்மை ஒரு ஜீவன் சுமக்கிறதே அதுதான் மெய்ஞானம்.
பழைய கிராமம்
புதிய பாதையில் போய்த்
திரும்பிவிட்டது காற்று.
காற்றால் நிரம்பியது தான் உலகம் காற்றின் திசை யாரும் அறியாதது எங்கும் நிறைந்தது காற்று நம்முள்ளும் காற்று தான் நிரம்பியிருக்கின்றன.
தொடர் மழை
நனைந்த துறவி சொல்கிறார்
இன்னும் நான் நனையவே இல்லை .
ஆம் நான் எப்போது நனைந்தேன் உடல் தான் நனைந்தது மனம் இன்னும் அப்படியே தான் இருக்கிறது.
ஒரு வாசகனுக்கு ஹைக்கூவை கடத்துவதும் இப்படிதான் கடத்த வேண்டும் அதை கவிஞர் மா. காளிதாஸ் சிறப்பாக செய்கிறார்.
அடைமழைக்குப் பின்
வானம் வெளுத்திருக்கிறது
குருவிகள் கரையான் தின்கின்றன.
அடைமழைக்குப் பின் காலைபொழுதில் நிலங்களில் ஆங்காங்கே கரையான்களை குருவிகள் கொத்தி தின்பதை பார்க்க முடிகிறது அந்த அழகிய காட்சிகளை
கண்முன்னே கொண்டுவருகிறார் கவிஞர்.
யாருமற்ற அறை
சுழன்று சுழன்று
நின்றுவிட்டது காற்று.
ஏன் அந்த அறையில் யாருமில்லை எல்லோரும் எங்கு சென்றார்கள்
அறையின் கதவு திறந்திருக்கிறதா இல்லை மூடியிருக்கிறதா
மூடிய அறையாக இருந்தால் எப்படி காற்று சூழலும் நிச்சயம் அறை திறந்துதான் இருக்க வேண்டும்
யாருமற்ற அறையை முழுவதுமாக ஆக்கிரமிக்கிறது காற்று என்பது எவ்வளவு
உணர்ந்துகொள்ள வேண்டிய விசயம் ..
புதர் மண்டிக் கிடக்கிறது
பயனற்ற பாதை
பறக்கிறது வண்ணத்துப்பூச்சி.
பயனற்ற பாதையென்று எதுவும் கிடையாது
பயணத்தின் பாதை முடிவற்றது
பாதைகள் முடிவதில்லை பயணத்தின் பாதையில்
முடிவிலியில் நாம் தான் மடிந்துபோகிறோம் .
மலர்களை தேடும் வண்ணத்துப்பூச்சிக்கு தனித்த பாதையென்று எதுவும் கிடையாது திரும்பும் திசைகளெல்லாம் பாதைகளௌ தான் அதுபோல தேடல்கள் உள்ள மனதிற்கு பாதைகள் தேவையேயில்லை என்பது என்னுடைய கருத்தாக கருதுகிறேன்.
பதிலேதும் சொல்லாமல்
மாயமாகிறார் துறவி
அப்போதும் தொங்குகிறது புழு .
துறவி ஏன் சொல்லவேண்டும் அதற்கு புழுவின் தியானம் புழுவிற்கு
யாருக்கும் யாரும் சொல்லித்தர தேவையில்லை அவர்களாகவே உணர்ந்து கொள்வார்கள் அதுவே தியானத்தின் உச்ச நிலை.
இப்படியொரு தொகுப்பை கையில் கொடுத்ததற்கு கவிஞருக்கு என் வாழ்த்துக்களும் நன்றியும் ..
1 கருத்துகள்
அருமை
பதிலளிநீக்கு